Sunday, September 23, 2007

361. எங்கே கடவுள் ? - கி அ அ அனானி

கி அ அ அனானியிடமிருந்து மற்றும் ஒரு இடுகை

உங்கள் பார்வைக்கு...

எ அ பாலா
**************************************************************

ஆபரேசன் தியேட்டரை விட்டு வெலியே வந்த டாக்டரைப் பார்த்துக் கேட்டாள் " டாக்டர் ...என் பையன் எப்படி இருக்கிறான்?பூரணமாக குணமாகி விடுவான் இல்லையா? இப்போது நான் அவனைப் பார்க்கலாமா"

"சாரிம்மா..நாங்கள் எவ்வளவோ முயன்றும்.." டாக்டர் மீதியை சொல்லாமலே உதட்டைக் கடித்து அவளது தோளை ஆதரவாக தட்டினார்.

அவளுக்கு உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்தது.." டாக்டர்..டாக்டர்...என் குழந்தைக்கு ஏன் இது மாதிரி...குழந்தைகளுக்கு ஏன் இது போல் புற்றுநோய்?"கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் மளுக்கென்று கரையுடைத்தது.

மனம் அரற்றியது " கடவுளே..கடவுளே..கை விட்டு விட்டாயே? எங்கே இருந்தாய்? என் மகனுக்கு மிகவும் தேவையான போது ஏன் வரவில்லை?".துக்கம் கேவலாக வெளி வந்தது

டாக்டர் "உள்ளே போய் மகனைப் பார்க்கிறீர்களா?மே பீ அவனுடன் சிறிது நேரம் தனியாக இருக்க ஆசைப்படுவீர்கள்.உள்ளே ஒரு நர்ஸ் இருக்கிறார்.அவர் வந்ததும் நீங்கள் உள்ளே போகலாம்..அப்புறம் சிறிது நேரத்தில் அவனது உடலை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எடுத்துப் போய் விடுவார்கள்"ஆதரவாக தோளைத் தட்டி விட்டு தலை குனிந்தவாறு நடந்தார்.

தட்டுத் தடுமாறி மகனை வைத்திருந்த அறைக்குள் நுழைந்தாள்.வெளிச்செல்ல முயன்ற நர்ஸை கையைப் பிடித்து நிறுத்தினாள்.சோகத்தில் தள்ளாடியவளை நர்ஸ் ஆதரவுடன் பிடித்துக் கொண்டு மகனை கிடத்தியிருந்த படுக்கையின் அருகில் அழைத்துச் சென்றாள்.மகனைப் பார்க்கும் போது உலகத்தின் மொத்த சோகமும் பந்தாகத் திரண்டு வந்து நெஞ்சை அடைப்பது போல் இருந்தது.மெதுவாக மகனுடைய கற்றையான தலை முடியை மெல்ல வருடினாள்.அழுத்தினால் வலித்து விடுமோ என்பது போல மெதுவாக கோதியபடி இருந்தாள்.

"வேணுமானால் ஒரு கற்றை முடியை எடுத்துத் தரவா அம்மா...மகனின் ஞாபகார்த்தமாக" மெல்லிய குரலில் நர்ஸ் கேட்டாள்

"சரி" என்றவளிடம் நர்ஸ் ஒரு கற்றை முடியை மெதுவாக வெட்டி ப்ளாஸ்டிக் பையிலிட்டு கொடுத்தாள்.

அதை வாங்கும் போது அந்தத் தாய் " இவன்தான் தன்னுடைய உடம்பை மருத்துவக் கல்லூரிக்கு தானமளிக்க வேண்டும் என பிடிவாதமாக சொன்னான்.நான் முதலில் மறுத்தேன்.ஆனால் அவனோ விடாப்பிடியாக ..அம்மா நான் இறந்த பிறகு இந்த உடம்பை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன்? ஒரு வேளை இது வேறு யாராவது ஒரு சிறுவன் தன் தாயுடன் மேலும் சில காலம் இருக்க உதவலாமே" என்ற போது என்னால் மறுக்க முடியவில்லை" என்றாள்." இவன் மனசு பூராவும் தங்கம்...எந்த நேரத்திலும் அடுத்தவர் பற்றி நினைப்புதான்.அடுத்தவருக்கு உதவுவது பற்றிதான் சதா சர்வ காலமும் சிந்தனை"

" கடவுளே..கடவுளே..இப்படிப் பட்ட நல்ல குழந்தையை கை விட்டு விட்டாயே? எங்கே இருந்தாய்? என் மகனுக்கு மிகவும் தேவையான போது ஏன் வரவில்லை?" மீண்டும் மனது அரற்றியது.

மெதுவாக அந்தக் குழந்தைகள் மருத்துவமனை விட்டு வெளியே வந்தவள், கடந்த ஆறு மாதங்களாக அவளுக்கும் அவள் மகனுக்கும் வீடாகவே மாறி விட்ட ஆஸ்பத்திரியை கடைசி முறையாக திரும்பப் பார்த்தாள்.

ஆஸ்பத்திரியில் தந்த மகனது உடமைகளையும், தலை முடி அடங்கிய பையையும் காரில் தன் பக்கத்தில் வைத்தாள்.வீட்டை அடைந்த போது ஒரு யுகமே கழிந்தது போல் இருந்தது. மகனில்லாத வீட்டின் வெறுமை அவளை முகத்தில் அறைந்தது.மெதுவே கையில் மகனுடைய உடமைகளுடன் அவனது அறைக்குள் நுழைந்தாள். அவனது விளையாட்டு பொருட்கள்,மாடல் கார் அனைத்தையும் அவன் வைக்கும் அந்தந்த இடங்களில் வைத்தாள்.

அவனது படுக்கையில் சரிந்து அவன் தலையணையை அவனே போல் நினைத்து அணைத்த படி அடைத்து வைத்திருந்த துக்கமெல்லாம் பொங்கி வர நெஞ்சே வெடித்து விடும் போல் அழுதாள்.அழுதழுது எப்போது தூங்கினோம் என்று தெரியாமலே தூங்கிவிட்டாள்.

கிட்டத்தட்ட ஏதோ குளிர் காற்று உடலை வருடுவது போல் ஒரு சிலிர்ப்பு தோன்ற படக்கென விழிப்பு வந்தது.அப்போது படுக்கையில் அவளருகே நான்காக மடிக்கப்பட்ட ஒரு கடிதம் மெல்லிய காற்றில் பட படத்துக் கொண்டிருந்தது.

எடுத்துப் படிக்கலானாள்

" அன்புள்ள அம்மா,

என்னை இழந்து மிகவும் தவிப்பாய் என்று தெரியும்.நான் உன் அருகில் இல்லாததால் உன்னை மறந்து விடுவேன் என்றோ உன்னிடம் அன்பு செலுத்துவதை நிறுத்தி விடுவேன் என்றோ ஒரு போதும் நினைக்காதே.நான் எப்போதும் உன்னிடம் அன்பு செலுத்திய வண்ணமே இருப்பேன் .நாட்கள் செல்லச் செல்ல உன் மீது அன்பு கூடுமே தவிர குறையாது.வாழ்வின் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவதொரு கணத்தில் நாம் மறுபடி சந்திப்போம்.அது வரை...பொருத்திரு..வேண்டுமெனில் அன்பு செலுத்த ஒரு பிள்ளையை தத்தெடுத்துக் கொள்.நீ தனிமைத் துயரிலிருந்தும் மீளலாம்.என்னுடைய இடத்தில் நீ வேறு ஒருவனை மகனாக வரிந்து அன்பு காட்டுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.மாறாக எனக்கு மிகவும் மகிழ்சியே.நீ அவனுக்கு என்னுடைய அறையையே கொடுக்கலாம்.என்னுடைய பரிசுப் பொருட்கள் விளையாட்டு சாமான்கள் , சைக்கிள், உடைகள் அத்தனையும் தரலாம்.ஆனால் நீ ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தால்..ஒரு வேளை அவளுக்கு பையன்களாகிய நாங்கள் உபயோகிக்கும் விளையாட்டு பொருட்கள் போன்றவை பிடிக்காமல் போகலாம்..ஏனெனில் பெண்ணல்லவா.அப்படிப்பட்ட பட்சத்தில் அவளுக்கு நீ அனைத்தும் புதிதாக வாங்கிக் கொடு...பொம்மைகள் முதற்கொண்டு..சரியா?

அப்புறம் என்னைப் பற்றியே நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டிருக்காதே.நான் இப்போது இருக்கும் இடம் மிக நன்றாக இருக்கிறது.தாத்தா பாட்டி அனைவரையும் பார்த்தேன்.அவர்கள் எனக்கு இங்கு சில இடங்களை சுற்றிக் காட்டினார்கள்.ஆனாலும் பார்க்க நிறைய இடம் இருக்கிறது..அம்மா இது மிகப் பரந்த இடம்.முழுவதும் பார்க்க நிறைய நேரமாகும்.இந்த இடத்தில் அங்கும் இங்குமாக பறக்கும் தேவதைகள் மிகவும் அழகாய் இருக்கிறார்கள்.

அம்மா !ஒன்று தெரியுமா? கடவுள் நாம் பார்க்கும் எந்தப் படத்தினைப் போலவோ அல்லது நாம் நினைப்பது போலவோ இல்லவே இல்லை.ஆனாலும் அவரைப் பார்த்த கணத்தில் "அவர்தான் கடவுள்" என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.நான் ரொம்ப முக்கியமானவன் போல என்னைத் தன்னருகே அழைத்து அமர்த்திக் கொண்டார்.அவரருகில் அமர்ந்து பேசும் போதுதான், உன்னை கடைசியாய் பார்க்க முடியாமல் போனதால் விடை பெறவாவது உனக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்ற என்னுடைய ஆசையை அவரிடம் சொன்னேன்.நடக்கக் கூடிய காரியமல்ல என்று அறிந்தே ஒரு தாபத்தில் அவரிடம் கேட்டேன்..என்ன ஆச்சரியம்..சில தாள்களைக் கையில் கொடுத்து தான் உபயோகிக்கும் எழுது கோலையே என்னிடம் கொடுத்து எழுதச் சொன்னார்.அனேகமாக வசந்தத்தின் தேவதையைத்தான் இந்தக் கடிதத்தை உன்னிடம் கொண்டு சேர்க்க அனுப்புவார் என்று நினைக்கிறேன். அம்மா...ஒரு விஷயம்..நீ கேட்ட ஒரு கேள்விக்கும் பதிலை உனக்கு மறக்காமல் எழுதச்சொல்லி என்னிடம் சொன்னார். நீ அவரைக் கேட்டாயாமே "" கடவுளே..கடவுளே..இப்படிப் பட்ட நல்ல குழந்தையை கை விட்டு விட்டாயே? எங்கே இருந்தாய்? என் மகனுக்கு மிகவும் தேவையான போது ஏன் வரவில்லை?" என்று.

கடவுள் சொன்னார் " என் புதல்வனை சிலுவையில் அறையும் போது எங்கிருந்தேனோ அங்கேதான் இருந்தேன்" என்று.ஆம்.அவர் எப்போதும் போல் உலகின் எல்லாக் குழந்தைகளுக்கும் அருகில்தான் இருந்தாராம்."அப்புறம் இந்தக் கடிதத்தை நீ மட்டும்தான் படிக்க முடியும்.மற்றவருக்கு இது வெற்றுத் தாளாகத்தான் தெரியும் . சரியம்மா..கடவுளிடம் எழுதுகோலை திரும்பத் தர வேண்டும்.வாழ்க்கைப் புத்தகத்தில் இன்னும் சில புது அத்தியாயங்களை அவர் எழுத வேண்டுமாம். அடடா சொல்ல மறந்தே போனேனே..இப்போதெல்லாம் எனக்கு வலியே இல்லை.எனது புற்று நோயெல்லாம் போயே போய் விட்டது.எனக்கு இப்போதுதான் மிக மிக சந்தோஷம்.ஏனென்றால் நோயினால் எனக்கிருந்த அந்த வேதனையையும் வலியையும் என்னால் தாங்கவே முடியவில்லை.தன் குழந்தையாகிய நான் வேதனைப் படுவதை பார்த்திருந்த கடவுளாலும் பொறுக்க முடியவில்லையாம்..அந்தக் கணத்தில்தான் அவர் கருணை தேவதையை அனுப்பி என்னை தன்னிடம் கூட்டி வரும்படி சொல்லிவிட்டாராம். போகும் வழியில் கருணை தேவதை சொல்லிற்று" இப்படி எப்போதாவதுதான் நடக்கும்...நீ கடவுளுக்கு மிக நெருக்கமானவன்" என்று.
அம்மா இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?
அன்புடன்
(கையொப்பம்)
உன் மகன் மற்றும் கடவுள்

பின் குறிப்பு

சிலுவயில் அறையப்பட்ட போது ஏசு சொன்னதாக சொல்லப்படும் ஹீப்ரூ வரிகள்."ஏலி..ஏலி லாமா சபக்தனி"(கடவுளே.. கடவுளே நீங்களுமா என்னைக் கை விட்டீர்)

Quote
" உன்னால் ஒன்றும் செய்ய முடியாது போகும் போது கடவுள் உனக்காக நிச்சயம் ஏதாவது செய்கிறார் "

கி அ அ அனானி.

*************************************************************************************
*361*

8 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test comment !

SurveySan said...

Very touching.

Belief is life.

reminded me of this event
http://aaththigam.blogspot.com/2007/04/blog-post_12.html

God is certainly among us in some form or shape.

cheena (சீனா) said...

கடவுளின் செயலுக்கு காரணம் கண்டு பிடிக்க முடியாது. கடவுளும் கருணைக் கொலையை ஆதரிக்கிறார். மனிதன் துயரத்திலிருந்து விடுபட கடவுள் அவனை அழைத்துக் கொள்கிறார்.

ஜீவி said...

நிரம்ப உருக்கமாகவும், ஆழ்ந்த
தத்துவத்தை, மிக எளிய வரிகளில்
சொல்வதாகவும் இந்தப் பதிவு
இருந்தது.
நானும் ஒரு பதிவு போட்டேன் என்றில்லாமல், 'எழுதுவது உலகு தழுவி எத்தனையோ பேரைச் சென்றடைகிறதே' என்கிற நியாயமான பொறுப்புணர்வுடன், தளத்தை நல்ல விதத்தில் உபயோகிக்கிறீர்கள்.
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

அருமை அருமை.
நன்றாக இருக்கிறது.

said...

அன்புள்ள எ அ பாலா அவர்களுக்கு

தொடர்ந்து எனது இடுகைகளை பதிப்பித்து வருவதற்கு நன்றி

கி அ அ அனானி

said...

சர்வேசன்

///Belief is life.///
///God is certainly among us in some form or shape.///


சரியாகச் சொன்னீர்கள்

///http://aaththigam.blogspot.com/2007/04/blog-post_12.html///

நெஞ்சை நெகிழ வைத்த அந்தக் குட்டி பெண்ணைப் பற்றி நானும் ஏற்கனவே படித்திருக்கிறேன், சுட்டியமைக்கு நன்றிகள்

கி அ அ அனானி

said...

சீனா, ஜீவி, வடுவூர் குமார்

கருத்துக்களுக்கு நன்றி


ஜீவி

///நானும் ஒரு பதிவு போட்டேன் என்றில்லாமல், 'எழுதுவது உலகு தழுவி எத்தனையோ பேரைச் சென்றடைகிறதே' என்கிற நியாயமான பொறுப்புணர்வுடன், தளத்தை நல்ல விதத்தில் உபயோகிக்கிறீர்கள்.///

மனமார்ந்த நன்றிகள்..
எ அ பாலா தளத்தை நல்ல முறையில் உபயோகிக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனாலும் நான் எழுதும் எல்லாப் பதிவும் அனைவருக்கும் உபயோகமுள்ளதாக நான் எழுதுவதில்லை என்பதே உண்மை :))

கி அ அ அனானி

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails